இந்தியா

உஜ்ஜைன் நில மோசடி விவகாரம் : சர்ச்சைக்குள்ளான ம.பி. முதல்வரின் குடும்ப சொத்து பட்டியலை வெளியிட்ட பாஜக..

மாஸ்டர் பிளான் புகார் உண்மையில்லை.., குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என பாஜக விளக்கம்!

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் உஜ்ஜைன் நகரில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து வாங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் 'அடிப்படையற்றவை' என்றும், இது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முதல்வரை பலவீனப்படுத்த காங்கிரஸ் நடத்தும் அரசியல் சதி என்றும் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக மறுத்துள்ளது.

காங்கிரஸின் குற்றச்சாட்டும் உச்சநீதிமன்ற விசாரணை கோரிக்கையும்..

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரத்தை "மகாகால் நிலத்தின் கொள்ளை" என்று விமர்சித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி ஒருவரைக் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முதல்வர் மோகன் யாதவ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பாஜகவின் அதிகாரப்பூர்வ மறுப்பு மற்றும் சொத்து விவரங்கள்..

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்ட மாநில பாஜக தலைவர் ஹேமந்த் காண்டேல்வால், இந்த புகார்களில் எள்ளளவும் உண்மையில்லை என்று கூறினார்.

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே காங்கிரஸ் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக தலைவர் ஹேமந்த் காண்டேல்வால் வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, முதல்வர் மோகன் யாதவ் கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருக்கு 17 ஏக்கர் நிலம் இருந்தது, தற்போதைய நிலவரப்படியும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதேபோல், அவரது மனைவி சீமா யாதவ் பெயரில் உள்ள 12.29 ஏக்கர் நிலத்திலும், 2023 ஆண்டு முதல்வராவதற்கு முன்பே அவரது மகன் வைபவ் யாதவ் பெயரில் இருந்த 16 ஏக்கர் நிலத்திலும் எவ்வித அதிகரிப்பும் ஏற்படவில்லை;

இந்த நிலங்கள் அனைத்தும் உஜ்ஜைன் நகரின் அதிகாரப்பூர்வ 'மாஸ்டர் பிளான்' அமல்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே அவர்களது சொந்த உடைமையில் உள்ளவை ஆகும்.

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு அவரது மருமகள் ஷாலினி யாதவ் வாங்கிய 10 ஏக்கர் நிலமானது, அரசாங்கத்தின் மாஸ்டர் பிளான் எல்லைக்கு வெளியேயும், எந்தவொரு வணிகமயமாக்கப்பட்ட அல்லது வளர்ச்சி மண்டலத்திற்குள்ளும் வராததால், இந்த நில விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.