சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பழங்குடியின பெண் லெஹ்ரா பாய். இவர் பள்ளிப் பக்கமே ஒதுங்கியது இல்லை, படிப்பறிவும் கிடையாது.
ஆனால், தனது கணவனின் லாக்-அப் மரணத்திற்கு நீதி கேட்டு, இந்தியாவின் மிக உயரிய உச்ச நீதிமன்றம் வரை சென்று சத்தீஸ்கர் மாநிலத்தின் டிஜிபி, சிறைத்துறை இயக்குநர் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரைத் அதிர வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கடுமையாகச் சாடியதோடு, அவர்களின் விளக்கங்கள் "முற்றிலும் பொய்யானது மற்றும் கண்டிக்கத்தக்கது" என்று கூறி சத்தீஸ்கர் அரசுக்கு சாட்டையடி கொடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 2024-ல், லெஹ்ரா பாயின் கணவர் ஷ்ரவண் சூர்யவன்ஷி மதுபானம் வைத்திருந்ததாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட நான்கு நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என நீதித்துறை விசாரணையில் தெரியவந்தது.
கணவனை இழந்து தவித்த இரண்டு பெண் குழந்தைகளின் தாயான லெஹ்ரா பாய், இது லாக்-அப் சித்திரவதை மரணம் என்று கூறி போலீசாரை அணுகினார். ஆனால் அவர்கள் FIR பதிவு செய்ய மறுத்து, வழக்கை மூட முயன்றனர்.
முதலில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தை நாடிய லெஹ்ரா பாய்க்கு, அங்கு வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது. தவறு செய்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்படவில்லை.
இதனால் மனம் தளராத லெஹ்ரா பாய், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த நெடிய சட்டப் போராட்டத்தில், ஒட்டுமொத்த சத்தீஸ்கர் காவல் துறையையும் உச்ச நீதிமன்றக் கூண்டில் ஏற்றித் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, சத்தீஸ்கர் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மரணத்தை வேண்டுமென்றே மறைக்க முயன்றுள்ளனர் என்று கூறி விளாசினர்.
லெஹ்ரா பாயின் குடும்பத்திற்கு சத்தீஸ்கர் அரசு உடனடியாக ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும். லாக்-அப் மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மரணத்தை மூடி மறைக்க முயன்ற மற்றும் லாக்-அப் சித்திரவதைக்குக் காரணமான அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
படிப்பறிவு இல்லாத ஒரு எளிய பெண், இரண்டு ஆண்டுகள் விடாப்பிடியாகப் போராடி, மாநிலத்தின் உச்ச அதிகாரிகளை நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தில் தட்டிக்கேட்டு நீதியை வென்றுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது