பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்து பேசினார்கள்.
அப்போது இரு நாடுகளிடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு இருநாட்டு அதிகாரிகளுக்கும் அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இதற்கிடையில் இரு நாடுகள் இடையேயான இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை முன்னெ டுத்து செல்வதற்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமி சன் கிரீர் தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஸ்கோயல்- அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் செர்ஜியோ கோர், வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால், இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளருமான தர்பன் ஜெயின் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒப்பந்தம் தொடர்பான தலைமை பேச்சுவார்த்தையாளர் அளவிலான விவாதங்களை தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக பியூஸ்கோயல் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், இந்தியாவில் உள்ள அமெரிக்கா தூதர் செர்ஜியோ கோர் மற்றும் அவர்களது தூது குழுவினரை இந்திய வர்த்தகத் துறைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்த ஒப்பந்தம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.