நீட் மறுதேர்வை நாடு முழுவதும் 22.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் 6.27 சதவீத விண்ணப்பதாரர்களுடன் 6-வது இடத்தில் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் 44 சதவீதம் பேர் தேர்வை எதிர்கொள்கிறார்கள்.
கேள்வித்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட்(இளநிலை) நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக 21-ந் தேதி நடைபெற உள்ள மறுதேர்வுக்கு நாடு முழுவதும் 22.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மாநில வாரியாக பார்க்கும்போது, உத்தரபிரதேசம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 291 மாணவர்களுடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2 லட்சத்து 22 ஆயிரத்து 905 மாணவர்களுடன் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 2 லட்சத்து 3 ஆயிரத்து 470 மாணவர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 மாநிலங்கள் மட்டும் மொத்த பதிவுகளில் 34.4 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மானவர்கள் நீட் மறுதேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். இது தேசிய அளவில் மொத்த பதிவுகளில் 6.27 சதவீதமாகும். விண்ணப்பதாரர் எண்ணிக்கையின்படி தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. பீகாரில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 61 பேரும், கர்நாடகாவில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 466 பேரும் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு அடுத்ததாக தமிழகம் இடம் பெற்றுள்ளது. தமிழகம் உள்ளிட்ட முதல் 6 மாநிலங்கள் மட்டும் சேர்ந்து மொத்த தேர்வர்களில் சுமார் 54 சதவீத பங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய 5 தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மொத்த பதிவுகளில் 23.8 சதவீத பங்கைக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில், இந்தி பேசும் 3 மாநிலங்கள் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 44 சதவீத பங்கைக் கொண்டுள்ளனர்.
மேலும், மத்திய பிரதேசத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 162 பேரும், கேரளாவில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 609 பேரும், மேற்கு வங்காளத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 527 பேரும் பதிவு செய்துள்ளனர்.
மொழி வாரியாக பார்க்கும்போது, 18 லட்சத்து ஆயிரத்து 535 மாணவர்கள் (79.3 சதவீதம்) ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். 3 லட்சத்து 45 ஆயிரத்து 247 மாணவர்கள் (15.1 சதவீதம்) இந்தியில் தேர்வு எழுத உள்ளனர்.