இந்தியா

ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!

தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

ஜம்மு ரெயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரெயில் பயணி ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற 25,000 ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை, டிக்கெட் பரிசோதனை ஊழியர் சுதாரிப்புடன் செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது. பயணி ஒருவர் கத்ரா நிலையத்தில் இறங்கியபோது, தான் பயணித்த C-11 பெட்டியின் இருக்கை எண்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் தனது பயணப்பையை தவறுதலாக விட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே கட்டுப்பாட்டு அறை, உடனடியாக ரெயிலில் பணியில் இருந்த ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தது.

பரிசோதகரின் விரைவான நடவடிக்கை

கட்டுப்பாட்டு அறையின் தகவலைத் தொடர்ந்து, அன்றைய தினம் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் தினேஷ் குமார் உடனடியாக C-11 பெட்டிக்கு விரைந்தார். அங்கு யாருமின்றி தனியாக இருந்த பையைப் பத்திரமாகக் கைப்பற்றினார். பின்னர், தன்னிடம் இருந்த ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் மூலம் பயணச்சீட்டு விவரங்களைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட பயணியின் தொடர்பெண்ணைக் கண்டறிந்து அவரைத் தொடர்புகொண்டார். தான் விட்டுச் சென்ற பையில் பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகப் பயணி உறுதிப்படுத்தினார்.

பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட பணம்

பையைச் சரிபார்த்தபோது அதில் ரூ.24,980 ரொக்கப் பணம், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற அடையாள அட்டைகள் ஆகியவை பத்திரமாக இருந்தது தெரியவந்தது. ரெயில்வே விதிமுறைகளின்படி, அனைத்துப் பொருட்களும் சரிபார்க்கப்பட்டு ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உரிய பயணியிடம் பாதுகாப்பாக வழங்கி வைக்கப்பட்டது. தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி ஜம்மு ரெயில்வே கோட்டத்திற்கும் நேர்மையுடன் செயல்பட்ட ஊழியர் தினேஷ் குமாருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

ரெயில்வே அதிகாரிகளின் பாராட்டு

டிக்கெட் பரிசோதகரின் இந்தச் சிறப்பான சேவையைப் பாராட்டிய ஜம்மு கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ஊழியர்களின் நேர்மையும் விரைவான செயல்பாடும் பாராட்டுக்குரியது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் அவர்களின் உடைமைகளுக்கும் ரெயில்வே நிர்வாகம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறினார். மேலும் பயணிகள் தங்களின் உடைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் அவசர உதவிக்கு 139 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.