இந்தியா

திடீர் வெள்ளத்தால் மூன்று பேர் உயிரிழப்பு - அருணாச்சல பிரதேசத்தில் சோகம்

ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் பருவமழை முன்னேறி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கிம், வடக்கு வங்காளம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது; அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கனமழைக்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களில் வட மாநிலங்களை நோக்கி தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தாமதமாகி வரும் நிலையில், நாட்டின் தலைநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே மிக வெப்பமான காலை பொழுது பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை:

அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில், வட அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரும் இரண்டு முதல் மூன்று நாட்களில், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்டின் மேலும் சில பகுதிகள், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் தென்கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் பருவமழை முன்னேறி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி பருவமழை:

இருப்பினும், ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உத்தர பிரதேசத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், அது தீவிரமானதாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான 'ஸ்கைமெட்' (Skymet) தகவலின்படி, சாதகமான சூழல் நிலவினால் ஜூலை 04-ஆம் தேதி டெல்லியில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.