இந்தியா

திருப்பரங்குன்றம் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணை

சுப்ரீம் கோர்ட்டில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரி அறிக்கை தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நாளை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை கார்த்திகை தீபத்திருநாளன்று, மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த தீபத்தூணில் தீபம் ஏற் றப்படவில்லை. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அர்விந்த் குமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு முன் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பா.கருணாகரனுடன் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், துரதிர்ஷ்டவசமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற இயலவில்லை. மாவட்ட கலெக்டர் என்ற முறையில் பின்பற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். இடைக்கால உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதை பரிசீலிக்க வேண்டும் என முறையிட்டார்.

ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், இந்து தர்ம பரிஷத் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெய் சுகின் ஆகியோர் இந்த விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும் என்று கோரினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரி அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோட்டில் இன்று மீண்டும் முறையிட்ட நிலையில் வழக்கு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நாளை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பாஞ்சோலி அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT