

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் என அழைக்கப்படும் கல் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மனமார்ந்த மன்னிப்பு கோரியுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே, தூணில் தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், வழக்கமான இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவது என அறங்காவலர் குழு தீர்மானித்ததாகக் கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதே சமயம், திருப்பரங்குன்றம் மலையில் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், அடிவாரப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மற்றும் மலை மீது உள்ள தூண் அருகேயும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாதது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் 17 பக்க முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு அவர் தமது அறிக்கையில் மனமார்ந்த மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், தீபம் ஏற்றுவதற்கும் தேவஸ்தானத்தின் அனுமதியைப் பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், ஆனால் அறங்காவலர் குழு வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றத் தீர்மானித்ததால் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் குழுவினரால் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற நிலையில், தேவஸ்தானம் 10 பேர் கொண்ட பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கு அதிகாரம் அளித்தது குறித்துக் கோயில் நிர்வாகம் எந்தக் கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரத்தில், தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபத்தூணில் தீபம் ஏற்ற வரவில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சல் வாயிலாக நினைவூட்டிய போதிலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்தது என்றும் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.