இந்தியா

நூற்றாண்டில் 3-வது பெரிய வறண்ட ஜூன்: வாட்டி வதைக்கும் எல் நினோ!

கடந்த 100 ஆண்டுகளில் 3-வது மிகக் குறைந்த மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ந்துவரும் நிலையில், இந்தியா கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதத்தைப் பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது மிகக்குறைந்த மழைப்பொழிவு கொண்ட 3வது ஜூன் மாதமாக நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் பதிவாகியுள்ளது. தரவுகளின்படி, இயல்பான சராசரியான 157.7 மி.மீ. உடன் ஒப்பிடுகையில், இதுவரை நாடு முழுவதும் வெறும் 92.2 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது.

இதற்கு முன்பு 2009-ல் 87.5 மி.மீ மழையையும், 2014-ல் 92.1 மி.மீ மழையையும் இந்தியா பதிவு செய்துள்ளது. மாதத்தின் கடைசிநாளன இன்று ஓரளவு மழை பெய்தாலும், ஜூன் மாதத்திற்கான மொத்த மழையளவு சுமார் 100 மி.மீ. மட்டுமே இருக்கும்.

இம்மாதம் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும், ஜூலை மாதத்தின் முதல் வாரம் மழை அதிகமாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்திய இந்தியாவில் 54% மழைப்பொழிவு பற்றாக்குறை பதிவாகியுள்ளது.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 41%, வடமேற்கு இந்தியாவில் 30%, மற்றும் தென்னிந்தியாவில் 28% மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது.

நாட்டின் நான்கு முக்கியப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு மழைப்பொழிவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறானது என்றும், இது எல் நினோ ஏற்கனவே பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டதைக் குறிப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.