26/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி  
இந்தியா

ஒன்றுபட்ட தேசத்தின் மன உறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது.. 26/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி

தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தியுள்ளார்

2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் உயிரிழநததன் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய பாதுகாப்புப் படையினரின் துணிச்சலையும் தியாகத்தையும் பாராட்டினார்.

திரௌபதி முர்மு

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் இந்த துயரமான நிறைவு நாளில், உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவுகூர்ந்து நான் தலைவணங்குகிறேன்.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக அஞ்சா நெஞ்சத்துடன் நின்ற நமது துணிச்சலான ராணுவ வீரர்கள், காவல்துறையினர் அனைவரின் வீரத்திற்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகமும் தன்னலமற்ற சேவையும் நமது தேசத்தின் ஆன்மாவில் என்றென்றும் பதிந்திருக்கும்.

பயங்கரவாதம் வாழ்க்கையைச் சிதைக்கலாம், ஆனால் தைரியம், கருணை மற்றும் மீண்டு வரும் திறனில் ஒன்றுபட்ட ஒரு தேசத்தின் மன உறுதியை அதனால் ஒருபோதும் உடைக்க முடியாது.

இன்று, நாம் உயிர் பிழைத்தவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் துணை நிற்கிறோம்.

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழித்து, மேலும் அமைதியான மற்றும் மனிதாபிமானமான உலகத்தை நோக்கிப் பணியாற்றுவதற்கான கூட்டு உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2008ஆம் ஆண்டு இதே நாளில், மும்பையில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் தேசம் முழுவதையும் உலுக்கியது.

பயங்கரவாதிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

மேலும், இந்தத் தாக்குதலில் பலியான அனைத்து அப்பாவி உயிர்களுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

பயங்கரவாதம் என்பது மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றமாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான மோடி அரசின் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கை உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது.

இன்று, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியா ஒரு முன்னணிப் பங்கை வகிக்கிறது. ஒவ்வொரு வகையான பயங்கரவாதத்திற்கும் ஒவ்வொரு சதித்திட்டத்திற்கும் எதிராகத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

26/11 தாக்குதல்

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக மும்பையை அடைந்த, ஆயுதம் ஏந்திய லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள், நகரின் பல முக்கிய இடங்களை தாக்கினர்.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல், டிரைடென்ட் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்ட் கஃபே மற்றும் காமா மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இது எந்தவொரு இந்திய நகரத்தின் மீதும் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகும்.

லஷ்கர் இ தைபா அமைப்பைச் சேர்ந்த பத்து பேரில் ஒன்பது பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிய ஒரேயொருவரான அஜ்மல் கசாப் பிடிக்கப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

SCROLL FOR NEXT