ஆறாத ரணம்.. 166 பேர் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்
Published on: 
Summary

மும்பையை உலுக்கிய 26/11 பயங்கரவாத தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மும்பையை உலுக்கிய 26/11 பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் பதினெட்டு ஆண்டுகள் ஆன பிறகும், அதன் காயங்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காது நீடிக்கின்றன.

2008 நவம்பர் 26 அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரை இழந்தவர்களுக்கு மும்பை 18வது ஆண்டாக இன்று அஞ்சலி செலுத்தி வருகிறது.

தாக்குதல்

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக மும்பையை அடைந்த, ஆயுதம் ஏந்திய லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள், நகரின் பல முக்கிய இடங்களை தாக்கினர்.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல், டிரைடென்ட் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்ட் கஃபே மற்றும் காமா மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இது எந்தவொரு இந்திய நகரத்தின் மீதும் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகும்.

லஷ்கர் இ தைபா அமைப்பைச் சேர்ந்த பத்து பேரில் ஒன்பது பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிய ஒரேயொருவரான அஜ்மல் கசாப் பிடிக்கப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

முன்னதாக 1993 மார்ச் 12 அன்று, மும்பையில் 12 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்கா அஞ்சலி

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளில், அத்தாக்குதல்களில் உயிரிழந்த 166 அப்பாவி மக்களை அமெரிக்கா நினைவுகூர்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு பேர் அமெரிக்கக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த நாடு தொடக்கத்தில் மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் அமைந்திருந்த நினைவிடத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் சென்று அஞ்சலி செலுத்தியதையும் செர்ஜியோ கோர் நினைவு கூர்ந்தார்.

X