இந்தியா

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்: கோடீஸ்வரராக ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய 3 நண்பர்கள் மீட்பு!

இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்ஸ் ஒன்றால் உந்தப்பட்டு பெரிய மனிதர்களாக மாற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால், கோடீஸ்வரராக ஆக வேண்டும் என ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகும் ரீல்ஸ்களைப் பார்த்து எளிதில் பணம் சம்பாதித்து பெரிய ஆளாக மாற வேண்டும் என்ற விபரீத கனவுடன் வீட்டை விட்டு வெளியேறிய மூன்று நண்பர்களை ஆக்ரா போலீசார் தீவிர தேடுதலுக்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா லோஹாமண்டி பகுதியில் ஒரே பகுதியில் வசித்து வந்த மூன்று நண்பர்கள், இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்ஸ் ஒன்றால் உந்தப்பட்டு பெரிய மனிதர்களாக மாற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர். கடந்த 17ஆம் தேதி, பணம் சம்பாதித்து பெரிய ஆளாகும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்ற உறுதியோடு அவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.

புறப்படும் முன், சினிமா பாணியில் பெற்றோர்களுக்கு ஒரு கடிதத்தையும் அந்தச் சிறுவன் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். அதில், "ஐ லவ் பாப்பா, ஐ லவ் மம்மி, பெரிய மனிதனாகித்தான் திரும்புவேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மூன்று தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய ஆக்ரா போலீசார், பல்வேறு பகுதிகளில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையின் இறுதியில், ஆக்ராவின் ராஜா மண்டி பகுதியில் உள்ள சாமுண்டா மாதா கோவில் அருகே அந்த மூன்று நண்பர்களையும் போலீசார் வெற்றிகரமாக மீட்டனர்.

வீட்டை விட்டுச் சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே காவல்துறையினர் இவர்களைக் கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். சமூக வலைதளங்களின் தாக்கம் இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்தி வரும் ஆபத்தான தாக்கத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT