இந்தியா

நில உரிமையாளர்களைப் போல நடித்து மோசடி: 'காஷ்மீரின் சார்லஸ் சோப்ராஜ்' நாளிதழ் சந்தா மூலம் போலீசில் சிக்கிய பின்னணி!

சோமநாத் கவுலுக்கு உருது நாளிதழ்கள் மற்றும் ஜம்மு பகுதியின் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் தீவிரமாக இருந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் போலி ஆவணங்கள் மற்றும் பல போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, தனக்குச் சொந்தமில்லாத நிலங்களை விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 80 வயது முதியவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் ஆயுர்வேத மருத்துவருமான சோமநாத் கவுல் என்பவர், 'மோகன் லால் தார்', 'பிரிஜ்நாத் பட்' மற்றும் 'ஹடிநாத் தார்' என பல போலி அடையாளங்களை உருவாக்கி உலா வந்துள்ளார். 1990களில் காஷ்மீரை விட்டு வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களுக்குச் சொந்தமான நிலங்களைக் குறிவைத்து இந்த மோசடிகள் நடத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் நிலத்தின் உரிமையாளரின் வழக்கறிஞர் என்றும், சில இடங்களில் தானே நிலத்தின் உரிமையாளர் என்றும் கூறி, போலி விற்பனைப் பத்திரங்களைத் தயாரித்து பலரிடமும் பல லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதன் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இவருக்கு 'காஷ்மீரின் சார்லஸ் சோப்ராஜ்' என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளது.

9 மாத தீவிர தேடுதல் வேட்டை

கடந்த ஜனவரி மாதம் போலி நில விற்பனைப் பத்திரத்தில் சோமநாத் கவுலின் புகைப்படம் சிக்கியதைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து, 2017-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பல்வேறு மோசடி வழக்குகளைத் தோண்டித் துருவத் தொடங்கினர். இவர் தனது அடையாளங்களை மறைக்க இருவாசி முகவரிகள், தலா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் இரு ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், பயோமெட்ரிக் சோதனைகளில் சிக்காமல் இருக்க தனது விரல் நுனிகளைச் சுட்டுச் சேதப்படுத்தியும், கண் அறுவை சிகிச்சை செய்து ஐரிஸ் ஸ்கேன் சோதனைகளை ஏமாற்றவும் முயன்றுள்ளார்.

மோசடி மன்னன்

போலீசாரின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சோமநாத் கவுலுக்கு உருது நாளிதழ்கள் மற்றும் ஜம்மு பகுதியின் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் தீவிரமாக இருந்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான தரகர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில், கவுலின் இந்த செய்தித் தாள் வாசிக்கும் பழக்கம் குறித்து தெரியவந்தது. இதன் அடிப்படையில் நாளிதழ் சந்தா விநியோகத்தைக் கண்காணித்த குற்றப்பிரிவு போலீசார், ஸ்ரீநகரின் வெளிப்பகுதியில் உள்ள சேவான் பகுதியில் அவர் மறைந்திருந்த வீட்டைக் கண்டுபிடித்தனர். செப்டம்பர் 24-ஆம் தேதி அந்த வீட்டைச் சூழ்ந்த போலீசார், அறையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த சோமநாத் கவுலை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சோமநாத் கவுல் தற்போது ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய நில மாஃபியாக்களின் மோசடிகளால் பல குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோவதைச் சுட்டிக்காட்டியுள்ள குற்றப்பிரிவு மூத்த காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களும் இடைத்தரகர்களும் நிலம் வாங்கும் முன் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT