பிரதமர் நரேந்திர மோடி, வாக்குரிமை கொண்டவர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாதவர்கள் என இரு வகையான குடிமக்களை உருவாக்க முயற்சிப்பதாக தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார்.
மேலும், 'எஸ்.ஐ.ஆர்' (SIR- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) மூலம் வாக்குகளை நீக்கி, தேர்தல்களில் வெற்றி பெற பிரதமர் மோடி "சதி" செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய அவர், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக 'இந்தியா' (INDIA) கூட்டணி முன்னெடுத்துள்ள போராட்டத்தை, சுதந்திர போராட்ட காலத்தில் 'சைமன் கமிஷன்'-க்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துடன் ஒப்பிட்டார்.
எஸ்.ஐ.ஆர் பணியின் போது பெருமளவில் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கடுமையாக சாடிய அவர், அன்று 'சைமன், திரும்பிப் போ' (Simon, go back) என்று முழக்கமிட்டது போல, இன்று 'ஞானேஷ், திரும்பிப் போ' (Gyanesh, go back) என்று முழக்கமிட வேண்டிய சூழல் உள்ளதாக கூறினார்.
"பிரதமர் மோடி இந்த நாட்டில் இரு வகையான குடிமக்களை உருவாக்க போகிறார். ஒன்று, வாக்குரிமை கொண்ட செல்வந்தர்கள். மற்றொன்று, வாக்குரிமை இல்லாத ஏழை மக்களில் மிக ஏழ்மையானவர்கள்.
அந்த ஏழைகள் யார்? ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள். இவர்கள் மோடி அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதால், இவர்களது வாக்குகள் நீக்கப்பட்டால், இவர்கள் என்ன செய்வார்கள்? வாக்குரிமை கொண்டவர்களின் வாக்குகளை மட்டும் பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்பதே இந்த சதி. இதுதான் இந்த எஸ்.ஐ.ஆர். (SIR) விவகாரம்," என்று அவர் கூறினார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள போராட்டத்தில், தெலங்கானாவில் இருந்து குறைந்தது 10,000 கட்சி தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.