பீகாரின் வெள்ள பாதிப்பை “தேசியப் பேரிடராக” அறிவித்து, நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.5,000 கோடி மத்திய உதவித் தொகுப்பை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாரா பகுதிகளை பார்வையிட்ட பிறகு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்ந்து வரும் நதி நீர்மட்டம் மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஆகியவை மில்லியன் கணக்கான மக்களை பாதித்து, இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பொது உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
நெருக்கடியின் தீவிரத்தோடு ஒப்பிடும் போது மாநில அரசின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் உதவிக்காக மத்திய அரசை வலியுறுத்த தவறியதாக மாநில என்.டி.ஏ. தலைவர்களையும் அவர் குற்றம் சாட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர், மருந்துகள், மின்சாரம், கால்நடை தீவனம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பெறுவதற்கு போராடி வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.
துண்டிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் படகுகளையும் மீட்பு வளங்களையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியை அவர் கோரினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போதுமான உணவு, குடிநீர், மருந்துகள், கால்நடைத் தீவனம் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்தார். வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அவர் அழைப்பு விடுத்தார்.
நீண்டகால நடவடிக்கைகளை நாடி, அவர் பீகாருக்கான வெள்ள தடுப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டம், ஆறு மற்றும் கரை மேலாண்மை, வடிகால் மேம்பாடு, நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் நவீன வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மேலும், நேபாளம் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் வலுவான நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பீகாரின் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை மற்றும் அவசரகால நிதிகளின் பயன்பாடு குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரினார்.