இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற தொழில்நுட்ப பின்புலம் கொண்ட தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த விற்பனைத் துறையில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொழிலில் வெற்றி பெற விரும்புபவர்கள் விற்பனை அழைப்புகளை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்று அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தொழில்நுட்பத் திறமையோ அல்லது சிறந்த தரமான பொருளை உருவாக்குவதோ மட்டுமே ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குப் போதாது என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தயாரிப்பு ஏன் தேவைப்படுகிறது என்பதைப் புரியவைத்து, அவர்களைப் பணம் செலுத்த வைப்பதே ஒரு நிறுவனத்தின் ஜீவாதாரமாகும்.
விற்பனை தொடர்பான உரையாடல்களில் ஈடுபடும் போது மட்டுமே தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு எளிதாகப் புரியவைப்பது எவ்வளவு கடினம் என்பது புலப்படும். இது தொழில்முனைவோரின் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதுடன், நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் சந்திக்கும் சவால்களையும் புரிந்துகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தொழில் நிறுவனமும் தப்பிப் பிழைத்து வெற்றிப் பாதையில் நகர வேண்டுமானால், ஏதேனும் ஒன்றை விற்பனை செய்தே தீர வேண்டும். விற்பனை என்ற அம்சம் இல்லாத வணிகம் என எதுவுமே இல்லை என்பதால், புதிய தொழில்முனைவோர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிப்புகளைச் சந்திக்கத் தயங்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இவரது இந்த இணையப் பதிவு சமூக வலைதளங்களில் பல தொழில்முனைவோர்கள் மற்றும் வணிக வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்களது தொடக்கக் கால அனுபவங்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபகாலமாக வணிக உலகம் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் ஸ்ரீதர் வேம்பு பேசியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் தரவு மையங்கள் மற்றும் கணினி நினைவகங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் மென்பொருள்களை உருவாக்கும் முறையிலும், நிரலாக்க மொழிகளிலும் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நினைவகம் இலவசமாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மென்பொருள்கள் உருவாக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதாகவும், இனி குறைந்த நினைவகத்தைப் பயன்படுத்தி இயங்கும் சாஃப்ட்வேர் அமைப்புகளை உருவாக்குவதே தற்போதைய அவசியமான ஆராய்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.