இந்தியா

பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்

24 மணி நேரம் வெடிப்பதும் முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, அதேநேரம் 24 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பண்டிகை காலங்களில் அதிக அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

பட்டாசுகளுக்கு தடை

எனவே இந்தியாவில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க குறிப்பாக டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

தீபாவளி

இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பசுமை பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

தடை விதிக்க முடியாது

அந்தவகையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் பண்டிகை நாளன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பசுமைப் பட்டாசுகளின் பயன்பாடு அனுமதிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், வரலே அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பட்டாசு வெடிக்க நேரம்

அவர்கள் கூறுகையில். 'நாங்கள் இதை தெளிவாக கூறுகிறோம். பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க மாட்டோம். அதேநேரம் 24 மணி நேரமும் பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்கப்போவது இல்லை. முழுமையான தடை, உணர்வுகளை பாதிக்கும். 24 மணி நேரம் வெடிப்பதும் முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்' என தெரிவித்தனர்.

எனவே பட்டாசு வெடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வழங்கக்கூடிய ஒரு தீர்வை நாம் கண்டறிய வேண்டும் என்றும் கூறினர்.

பசுமை பட்டாசுகள்

முன்னதாக, இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, 'சி.எஸ்.ஐ.ஆர்-நீரி' பரிந்துரைத்துள்ள, குறைவான பேரியம் உப்பு உள்ளிட்ட வேதிப்பொருளுடன் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசு பயன்பாடு குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தார்.

உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்படும் மேற்படி பட்டாசுகளுக்கு அனுமதிக்கலாம் எனவும் அவர் வழங்கிய குறிப்பில் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பட்டாசுகளில் பேரியம் பயன்படுத்தும் விவகாரம் குறித்து அக்டோபர் 15-ந்தேதி விசாரிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT