டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி-என்சிஆர் பகுதியில் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பட்டாசுகளை வெடிப்பதற்குத் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் எச்சரித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி உண்டு. இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 9 முதல் பட்டாசு வெடிப்பதற்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகள், நல்வாழ்வு மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் அமைதி மண்டலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுற்றியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களை 'பட்டாசு தடை செய்யப்பட்ட பகுதிகள்'என அடையாளப்படுத்தி, உரிய அறிவிப்பு பலகைகளை வைத்துத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் வெறும் ஏட்டளவிலேயே நின்றுவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான அமலாக்கம், பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பெயரளவில் மாற்றிவிடக் கூடாது என அதிகாரிகளை எச்சரித்துள்ளது. காற்று மாசுபாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.