இந்தியா

தலைமை தேர்தல் ஆணையரின் சட்டப் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் குறித்து நாட்டில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான முழுமையான பாதுகாப்பு தொடர்பான வழக்கில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்து வரும் நீதிமன்றம், இது குறித்த நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் குறித்து நாட்டில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளின்போது ஆணையர்களின் முடிவுகள் மீது எத்தகைய கேள்விகளையும் எழுப்ப முடியாத சூழல் உள்ளதா என்பது குறித்து நீதிமன்றம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தங்களது அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும் போது எடுக்கப்படும் முடிவுகள் அல்லது செய்யும் செயல்களுக்காக அவர்கள் மீது எந்தவொரு குடிமை அல்லது குற்றவியல் வழக்குகளையும் நீதிமன்றங்கள் விசாரிக்கவோ அல்லது தொடரவோ முடியாது என்று பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவிலேயே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டிய உச்சபட்ச தேர்தல் அமைப்பின் அதிகாரிகளுக்கு இத்தகைய முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுவது நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலைக் கேள்விக்குள்ளாக்குவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தேர்தல் முறைகள் மற்றும் SIR நடைமுறைகள் குறித்த பல்வேறு விவாதங்கள் நிலவி வரும் சூழலில், நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT