இந்தியா

பெட்ரோலில் எத்தனால் கலப்பு விவகாரம்: நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

எத்தனால் சதவீதத்தை வெளியிடக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் செல்ல உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கறிஞர் நரேந்திர கோஸ்வாமி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது.

மனுதாரரின் முக்கியக் கோரிக்கைகள்

பெட்ரோல் விநியோகிக்கும் குழாய்கள் மற்றும் வாடிக்கையாளர் ரசீதுகளில் எத்தனால் கலவை அளவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

எத்தனால் கலப்பினால் வாகனங்களின் மைலேஜ், என்ஜின் ஆயுட்காலம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

எந்தெந்த வாகன மாடல்களுக்கு இந்த பெட்ரோல் ஏற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு

விசாரணையின் போது, நுகர்வோருக்குத் தாங்கள் வாங்கும் எரிபொருளின் கலவையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது என மனுதாரர் வாதிட்டார்.

இருப்பினும், இந்த விவகாரத்திற்காக நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதை கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையோ அல்லது உரிய அதிகாரிகளையோ அணுகுமாறு அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.