உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கி வளாக விடுதியில் ஆயுஷ் ரஜோரியா (20) என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஐடி-ரூர்க்கியில் இரண்டாம் ஆண்டு பயிலும் 20 வயது மாணவர் தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
உயிரிழந்த மாணவர் ஆயுஷ் ரஜோரியா, காசியாபாத்தைச் சேர்ந்தவர். இவர், அந்த நிறுவனத்தின் கணிதத் துறையின் கீழ், கணிதம் மற்றும் கணினியியலில் இளங்கலை-முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து பயின்று வந்தார்.
சம்பவம் அன்று அவரது அறையில் இரவு சுமார் 11 மணியளவில் சக மாணவர்களால் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவரின் மரணத்திற்கு ஐஐடி ரூர்க்கி நிர்வாகம் இரங்கலை தெரிவித்துள்ளது.காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மாணவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதிபூண்டுள்ளதாகவும் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.