இந்தியா

டெல்லி காவல்துறையின் தாக்குதலால் கேட்கும் திறனை இழந்த மாணவி - அன்று பெல்லட் துப்பாக்கி... இன்று தடியடி!

தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தின்போது, பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் இளைஞர் ஒருவர் ஒருபுற கண்பார்வையை இழந்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட, சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகவேண்டும் என டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், இப்போராட்டங்களின் போது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை டெல்லி காவல்துறை கொடூரமாகத் தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி அதிரா ஒரு காதில் கேட்கும் திறனை இழந்ததாகவும், மற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது தடியால் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் உதைக்கப்பட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று பாதிக்கப்பட்டப் பெண்ணோடு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி.,

“கேரளாவைச் சேர்ந்த அதிரா தனது ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளார். காதில் அடிபட்டதால் அவருக்கு ஒரு காது கேட்காது. அவரால் இனி கேட்க முடியாது. கடந்த முறை நான் உங்களுக்குப் பார்வையிழந்த ஒரு இளைஞனை (பெல்லட் துப்பாக்கி தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞன்) காட்டினேன். இப்போது, ​​இவளுக்கும் ஒரு காது கேட்காது,” என்று ராகுல் காந்தி கூறினார்.

பாதிக்கப்பட்ட அதிரா, போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டபோது பேருந்தில் பெண் காவலர்கள் யாரும் இல்லை என்றும், அதுகுறித்தே தான் கேள்வி எழுப்பியதாகவும், இதனால் போலீசார் அவரை பலமுறை கன்னத்தில் அறைந்ததாக கூறியுள்ளார்.

இதனால் தனது கண்ணில் காயமும், காதில் பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதிராவைத் தொடர்ந்து இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மற்றொரு பெண்ணும், தடுப்புக் காவலில் டெல்லி காவல்துறையால் தான் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இன்னும் சிலரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

SCROLL FOR NEXT