

இந்தியா கூட்டணியினர் நேற்று உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றனர். இந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், இந்தியா கூட்டணித் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியின் கூட்ட நெரிசலின் நடுவே ராகுல் காந்தி சிக்கினார். அப்போது ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் அவரை நெருங்குபவர்களை தள்ளிவிட்டு சென்றனர்.
ராகுல் காந்தியும் தன்னை நெருங்குபவர்களை விலக்கிவிட்டு சென்றார். அப்போது கர்நாடக முதலமைச்சரை டி.கே. சிவகுமாரின் முகத்தை பார்க்காமல், அவரது சட்டையை இழுத்து பின்னே தள்ளுவார். இதுதொடர்பாக வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, தனக்கும் 2015-ல் இதுபோன்ற அவமானகர சம்பவம் காங்கிரஸில் நடந்ததாக தற்போதைய அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,
“2015-இல், ஒரு பெருமைமிக்க அசாமியராக, அவமானத்தைச் சகித்துக்கொள்ள நான் மறுத்துவிட்டேன். கடவுள் என் மீது கருணை காட்டினார்.
கர்நாடக முதலமைச்சர் என்பவர் வெறும் தனிநபர் மட்டுமல்ல; அவர் ஒரு அரசியலமைப்புச் சார்ந்த பதவியை வகிப்பவர்; அத்துடன், சிறப்பான வரலாறும், செழுமையான கலாச்சாரமும், ஆழ்ந்த பெருமிதமும் கொண்ட ஒரு மாநிலத்தின் முகமாகவும் திகழ்பவர்.
அவர் இந்தத் பொதுவெளியிலான அவமானத்திற்குத் பணிந்து போவாரா?
'புதிய பிம்பத்தை உருவாக்குதல்' மூலம் ஆணவத்தை மறைத்துவிட முடியாது. நீங்கள் விரும்பும் அளவுக்கு முகமூடியை மாற்றிக்கொள்ளலாம்; ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் முகம் மாறாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.