எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் முற்றிலும் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு நதிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியாவுக்கு திருப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் முடிவு அபாயகரமானதை உருவாக்கி விடும் என்று பாகிஸ்தான் சர்வதேச சமுதாயங்களிடம் பொய் கூறி வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் "எங்கள் நாட்டுக்கான நதிநீர் விநியோகத்தை அண்டை நாட்டின் பிரதமர் (மோடி) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார். எங்களது நதிநீர் உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்து, எங்கள் பங்கையும் எடுத்துக்கொள்பவர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்" என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் "1960-ல் உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் சர்வதேச சட்டங்களின்படி இன்னும் செல்லுபடியில்தான் உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ இந்தியா எடுத்த தன்னிச்சையான முடிவிற்கு சர்வதேச அரங்கில் எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைக்கால நிறுத்திய இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அப்படியே தொடர்கிறது. எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் உதவி செய்வதற்கு பதிலடியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது இந்தியா. எல்லைத்தாண்டிய பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் நம்பகமான, திரும்ப முடியாத வகையில் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.