இந்தியா

பிரதமரை விமர்சித்து மேடை நாடகம்: கோமாளிகளின் கட்சியாக மாறிய காங்கிரஸ்- பாஜக சாடல்

நாகரிகமுள்ள மற்றும் சரியான சிந்தனை கொண்ட எந்தவொரு நபரும் இதுபோன்ற தரமற்ற நகைச்சுவைகளை ரசிக்க மாட்டார்கள்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி இப்போது நகைச்சுவையாளர்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக மாறிவிட்டது" என்று பதிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு நடை மற்றும் செயல்பாடுகளை கிண்டல் செய்து நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்ட நகைச்சுவை நடிகர் புல்கித் மணி, பிரதமரை விமர்சிக்கும் வகையில் நடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோமாளிகளின் கட்சி பாஜக

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், இந்த நாடகம் மலிவான மற்றும் அருவருப்பான முறையில் நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார். நாகரிகமுள்ள மற்றும் சரியான சிந்தனை கொண்ட எந்தவொரு நபரும் இதுபோன்ற தரமற்ற நகைச்சுவைகளை ரசிக்க மாட்டார்கள் என்றும், ராகுல் காந்தியின் இதுபோன்ற நடவடிக்கைகள் இளைஞர்களிடம் இருந்து அவரை மேலும் தூர விலக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோல, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி இப்போது நகைச்சுவையாளர்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக மாறிவிட்டது" என்று பதிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் பிரதமரின் மறைந்த தாயார் குறித்து நாடகத்தில் குறிப்பிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்தூரில் ராகுல் காந்தி தலைமையில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நீட் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் கல்வி அமைப்பில் நிலவும் குளறுபடிகள் குறித்து மாணவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது, பிரபல மேடை நகைச்சுவை நடிகர் புல்கித் மணி ராகுல் காந்தியுடன் மேடையில் இணைந்து பிரதமர் மோடி வெளிநாட்டுத் தலைவர்களுடன் உரையாடும் விதம், "மை பிரண்ட்" என்று அழைக்கும் ஸ்டைல் மற்றும் அவரின் வெளியுறவு கொள்கைகளை கிண்டல் செய்து மிமிக்ரி செய்து நடித்தார். ராகுல் காந்தியும் இந்த நாடகத்தின் போது மேடையில் சிரித்தபடியே அவரோடு உரையாடிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் அரசியல் கொள்கைகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்ற போதிலும், நாட்டின் பிரதமரின் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், தனிப்பட்ட முறையில் அவரது குடும்பத்தினரை குறிப்பிட்டு பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாஜக தரப்பில் வாதிடப்படுகிறது.

அதேவேளையில், இது மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சாதாரணமான அரசியல் நகைச்சுவை நாடகம் மட்டுமே என்றும், நாட்டின் நிஜமான பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறை சீர்கேடு ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பாஜக இந்த பிரச்சனையைப் பெரிதாக்குகிறது என்றும் காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT