

மும்பையின் புதிய அடையாளமாக திகழும் கோஸ்டல் ரோடு பாலத்தில் அதிகாலையில் நிகழ்ந்த அதிவேக பயங்கர விபத்தில், பிஎம்டபிள்யூ ஆடம்பர கார் ஒன்று தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 75 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் காரில் பயணித்த மூன்று கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5:00 மணி முதல் 5:20 மணிக்குள் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மெரைன் டிரைவ் பகுதியிலிருந்து ஹாஜி அலி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், லாலா லஜபதிராய் கல்லூரிக்கு எதிரே உள்ள லோட்டஸ் ஜெட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார், பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி, காற்றில் இரண்டு முறை தலைகீழாகச் சுழன்று, மேம்பாலத்திற்கு கீழே உள்ள கட்டுமான பகுதிக்குள் 75 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து விழுந்தது. இதில் காரின் முன் பகுதியும் மேல்பகுதியும் உருக்குலைந்து முற்றிலும் சேதமடைந்தன.
சம்பவம் நடந்த உடனே அருகில் இருந்தவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை காவல்துறையினர் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டு நாயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காரை ஓட்டிச் சென்ற சனை குஜார்(21), ஆதித்யா ஜகசானியா(19), தைரியா சேத் (17) இவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆதித்யா ஓஸ்வால் (20/23) என்பவர் படுகாயங்களுடன் தப்பிப்பிழைத்து, நாயர் மருத்துவமனையின் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பலியான மாணவர்கள் அனைவரும் குஜராத்தின் அகமதாபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மும்பை ஜூஹு பகுதியில் உள்ள புகழ்பெற்ற NMIMS கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியிலிருந்து வார இறுதி நாளை கழிப்பதற்காக மெரைன் டிரைவ் பகுதிக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. காரின் உரிமையாளரான சனை குஜாரின் குடும்பத்தினர் தகவல் அறிந்து மும்பை விரைந்துள்ளனர்.
இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த காவல்துறையினர், அதிவேகமே விபத்துக்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளனர். காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் ஓட்டுநரால் வளைவில் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. தார்தேவ் காவல்நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்தும், வாகனத்தின் உதிரிப்பாகங்கள் பழுது அடைந்ததா என்பது குறித்தும் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.