ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நிலக்கரிச் சுரங்கத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத், கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அர்ஜுன் பிரசாத் உயிருடன் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்காக அவரது மனைவியே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிரைக் காப்பாற்றினார்.
தந்தையின் மறைவுக்குப் பின், குடும்பத்தைப் பராமரிக்க அவரது மனைவிக்கு வேலை செய்யக்கூடிய உடல் தகுதி இல்லை. வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தான அறுவை சிகிச்சை காரணங்களால் அவரால் கடினப் பணிகளைச் செய்ய இயலவில்லை. இதனிடையே, அவரது இரு மகன்களும் தாயைப் பராமரிக்க மறுத்துவிட்டுத் தனித்தனியாகச் சென்றுவிட்டனர்.
தாயையும் தனது குழந்தைகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருமணமான மகள், தனது கணவரின் மிகக் குறைந்த வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இதனால், தந்தையின் மறைவுக்குப் பின் காலியாக உள்ள பணியிடத்தில் கருணை அடிப்படையில் தன் மகளுக்கு வேலை வழங்குமாறு தாய் நிலக்கரிச் சுரங்க நிர்வாகத்திடம் மனு அளித்தார்.
ஆனால், 2017-ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்க பிராவிடன்ட் பண்ட் அமைப்பு, "மகள் திருமணமானவர்" என்ற ஒரே காரணத்தைக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் அளிக்கப்பட்ட மனுவையும் 2024 பிப்ரவரியில் நிர்வாகம் மீண்டும் நிராகரித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன் உத்தரவில், ஒரு பெண் திருமணமானவர் என்பதால் மட்டுமே தந்தையைச் சார்ந்திருக்கவில்லை என்று முடிவு செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தினார். கணவருக்குச் சொற்ப வருமானம் இருப்பதனால், அப்பெண் தன் தந்தையின் நிதி ஆதரவைச் சார்ந்திருக்கவில்லை என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
மகன்கள் தாயைக் கைவிட்ட நிலையில், சிறுநீரக தானம் அளித்த முதிய தாயையும் குடும்பத்தையும் காப்பாற்றத் தயாராக இருக்கும் மகளுக்கு முழு தகுதியும் உள்ளது. திருமண நிலை மட்டுமே கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு உரிமையை ரத்து செய்ய முடியாது. எனவே, எட்டு வாரங்களுக்குள் மறைந்த ஊழியரின் மகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என நிலக்கரிச் சுரங்க அமைப்பிற்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.