இந்தியா

சோனியா காந்தியின் சுயசரிதை: வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்!

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை இந்தியாவில் தாங்கள் வெளியிடவில்லை என பென்குயின் பதிப்பகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகமான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) நூலை இந்தியாவில் வெளியிடுவதிலிருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India) பதிப்பகம் விலகியுள்ளது.

மேலும், புத்தகத்தில் சில மாற்றங்களை செய்ய பதிப்பதகம் கோரிய நிலையில், அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததால் பதிப்பகம் விலகியதாக பரவும் தகவல்களுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பதிப்பகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கச் செய்தியில்.,

“இந்தியாவில் 'Belonging' (பிலாங்கிங்) நூலை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிடவில்லை. ஆசிரியர் பதிப்புரீதியான மாற்றங்களை ஏற்க மறுத்ததால் நிறுவனம் நூலை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்ததாகக் கூறப்படும் கருத்து, உண்மைக்கு புறம்பானது.

ஒரு பதிப்பாளராக, புத்தகங்களில் கொடுக்கப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதும், புத்தகத்திற்கு தேவையான பரிந்துரையை எழுத்தாளருக்கு வழங்குவதும் எங்கள் உரிமையும், பொறுப்பும் ஆகும். இது ஒரு புத்தக வெளியீட்டில் நடைபெறும் சாதாரண நடைமுறை.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களிலும் புத்தகத்தை வெளியீட வேண்டும் என்பதே ‘பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’வின் நிலைப்பாடாக இருந்தது.

ஆசிரியருடனான ரகசிய விவாதங்கள் குறித்து நாங்கள் மேலும் எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

பென்குயின் நிறுவனம் விலகியதை அடுத்து, ‘ஹார்ப்பெர் காலின்ஸ்’ (HarperCollins) நிறுவனம் இப்புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச வெளியீடு

இந்த விலகல் இந்தியாவின் பதிப்புரிமையை மட்டுமே பாதிக்கும். சர்வதேச அளவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஆல்ஃபிரட் ஏ. நாஃப்' (Alfred A. Knopf) நிறுவனம் மூலம் நவம்பர் 10 ஆம் தேதி இப்புத்தகம் வெளியாகிறது.

“பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love)

சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.

'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'

கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்தும் பென்குயின் நிறுவனம் பின்வாங்கியது.

இந்நூலை குறிப்பிட்டு, 2020-ல் லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ மோதல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த, அப்புதக வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்.