இந்தியா

SIR: ஒரு கட்சியின் வெற்றிக்காக ஜனநாயகத்தை ஹைஜேக் செய்த தேர்தல் ஆணையம் - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

ஜனநாயகத்தில், தேர்தல் ஆணையம் அல்லது உச்ச நீதிமன்றத்தை விட மக்களே முக்கியமானவர்கள்

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆட்சியில் நீடிப்பதற்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் ஹைஜேக் (கடத்தல்) செய்துள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் 13 கோடி மக்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியுள்ளது என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. கோபால கௌடா தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆட்சியில் நீடிப்பதற்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் ஹைஜேக் (கடத்தல்) செய்துள்ளதாகவும் இது நாட்டின் இறையாண்மை மீதான அத்துமீறல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தை விமர்சித்து கோபால கௌடா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கும் விரோதமானது

ஆணையத்தின் நடவடிக்கை அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது என்று அவர் கூறினார்.

வயது வந்த அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வது ஒரு அரசியலமைப்பு உரிமையே தவிர, அது வெறும் நிர்வாக வசதி அல்ல என்று கோபால கௌடா சுட்டிக்காட்டினார்.

ஒரு ஜனநாயகத்தில், தேர்தல் ஆணையம் அல்லது உச்ச நீதிமன்றத்தை விட மக்களே முக்கியமானவர்கள் என்றும் அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்

SIR செயல்முறையின் அனைத்து நிலைகளையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆராய்ந்து, ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கத் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார் .

தேர்தல் ஆணையம், இந்த நடவடிக்கை தொடர்பான ஆணையத்துக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளையும் ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து மறைத்தததால் எஸ்ஐஆரின் சட்டப்பூர்வத்தன்மையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

SCROLL FOR NEXT