Sikkim tunnel  
இந்தியா

Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்

வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிக்கிமில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் நிலச்சரிவு காரணமாக 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கித் தவிக்கின்றனர். மீத்தேன் வாயு கசிவால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு

சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.

நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

மீட்பு முயற்சி

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் மீட்புப் பணிகள் மிகவும் கவனத்துடன் உச்சக்கட்ட எச்சரிக்கையுடனும் மெதுவாக நடத்தப்பட்டு வருகின்றன. வாயுவின் அளவுதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு படை

வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தயார் நிலை

சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

உள்ளே சிக்கியுள்ள 27 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.