அசாம் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான நபர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்திற்குட்பட்ட காஜல்கான் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த நசிருல் ஷேக் என்பவன், தனது கூட்டாளிகளான பீர் முகமது மற்றும் ஹாருனுல் ஹசன் ஆகியோருடன் இணைந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
மேலும், அந்த கொடூரமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிராங் மாவட்ட காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முதன்மை குற்றவாளியான நசிருல் ஷேக் உட்பட மூன்று பேரையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட நசிருல் ஷேக்கை, நீதிமன்ற உத்தரவின்படி மூன்று நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க காஜல்கான் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புமேஸ்வர் மலைப் பகுதிக்கு நசிருல் ஷேக்கை காவல்துறையினர் நேற்று அழைத்துச் சென்றனர்.
அப்போது, நசிருல் ஷேக் திடீரென பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை பலமாகத் தள்ளிவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியை நோக்கித் தப்பியோட முயன்றுள்ளான்.
காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுத்தும் அவன் நிற்காமல் தொடர்ந்து ஓடியதால், வேறு வழியின்றி அவனைக் கட்டுப்படுத்த துப்பாக்கியால் சுட்டனர். இதில் நசிருல் ஷேக்கின் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். உடனடியாக மீட்கப்பட்ட அவன், காஜல்கானில் உள்ள ஜே.எஸ்.பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.