Ahmedabad
இந்தியா

விடுதி மாடியில் மாணவியின் கழுத்தை கம்பியால் இறுக்கி பாலியல் வன்கொடுமை : பாதுகாப்பு காவலர் அதிரடி கைது!

விடுதியில் பாதுகாப்பு காவலராகச் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியுள்ளது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்உள்ள தங்கும் விடுதி ஒன்றின் மொட்டை மாடியில், கல்லூரி மாணவி ஒருவரைப் பாதுகாப்பு காவலர் கம்பியால் கழுத்தை நெரித்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியான பாதுகாப்பு காவலரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.

பின்னணி:

குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் 23 வயது மாணவி ஒருவர், அகமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது, கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பெரும் பாதிப்புக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மொட்டை மாடியில் நடந்த கொடூரம்

மாணவி இரவு நேரத்தில் விடுதியின் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலர் தர்மசிங், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க, காவலர் அவரது கழுத்தில் கம்பியை மாட்டி பலமாக இறுக்கியுள்ளார்.

இதனால் மாணவியால் சத்தம் போட முடியாமல் போனது. அதை சாதகமாக்கிக் கொண்டு அந்த நபர் மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை

தாக்குதலுக்குப் பின், குற்றவாளி தப்பியோடியதை அடுத்து மாணவி மாடியில் இருந்து சத்தம் போட்டு கீழே இருந்த குடியிருப்புவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

10 தனிப்படைகள் மூலம் அதிரடி வேட்டை

இந்த சம்பவம் குறித்து ஆனந்த்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படத்தை அடுத்து, அகமதாபாத் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரும் இணைந்து உடனடியாக 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, குற்றவாளி லிப்ட் மூலமாக மாடிக்கு செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

குற்றவாளி குறித்த அதிர்ச்சித் தகவல்

கைது செய்யப்பட்ட குற்றவாளி தர்மசிங், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அந்த தங்கும் விடுதியில் பாதுகாப்பு காவலராகச் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியுள்ளது என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த வழக்கில் பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு அமர்த்தும் ஏஜென்சியின் பின்னணி மற்றும் அவர்கள் முறையான பின்னணி சரிபார்ப்பு செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.