ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதிஷா (நிதிச் சந்த்) என்பவரைப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்த நிதிச் சந்த், 2008-ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கல்வி பயின்ற போது, விசா விதிமுறை மாற்றங்களால் ஏற்பட்ட சிக்கல்களை எதிர்த்து நாடாளுமன்றக் குழுக்கள் முன் தீவிரமாகப் போராடினார். அந்தச் சமயத்தில் தான் அன்றைய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டேவை அவர் சந்தித்தார். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பந்தம், 2016-ஆம் ஆண்டு காதலாக மாறியது.
2016-ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட போதிலும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே நிதிச் சந்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் 2018 கேரள வெள்ளப்பெருக்கு, கோவிட் பெருந்தொற்று மற்றும் குடும்பச் சூழல் காரணமாக இந்த நிகழ்வு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மார்ட்டின் டே கேரளா வந்தடைந்து, தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார். வேஷ்டி அனிந்து கேரளா பாரம்பரிய உடையில் மாப்பிள்ளையாக மார்ட்டின் டே மிளிர, நிதிச் சந்த் கசவு புடவையில் காட்சியளித்தார். இந்த திருமண விழாவில் நிதிச் சந்தின் 22 வயது மகன் வேதிக் சங்கர் உட்பட நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
தற்போது நிதிச் சந்த் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார், மார்ட்டின் டே ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) முக்கிய தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.