இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: படங்களில் நடித்த திருநங்கையை திருமணம் செய்த ஆவடி வாலிபர்

முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம். அவர்தான் முதன்முதலில் காதலை என்னிடம் சொன்னார்.
திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்
திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்
Published on

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், திருச்செங்கோட்டை சேர்ந்த திருநங்கை ஒருவரும் 7 வருடங்களாக பழகி நேற்று கோபியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்

திருநங்கையை திருமணம் செய்து கொண்டது குறித்து தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் ராஜ் கூறும்போது, நான் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவன். கணினி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை கயல்விழி என்பவர் அறிமுகமானார் .

அவர் திருநங்கை என்பது எனக்கு முதலிலேயே தெரியும். முதலில் எங்களது பழக்கம் சாதாரண நட்பாக தொடங்கியது. தொடர்ந்து இரண்டு வருடம் நட்பாக பழகி வந்தோம். அவரை திருச்செங்கோடு நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறேன். அவரை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது . இருந்தாலும் இரண்டு வருடமாக நல்ல நட்புடன் பழகி வந்தோம். பின்னர் நான் தான் எனது காதலை முதல் முதலாக அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் உடனடியாக காதலை ஏற்கவில்லை நண்பர்களாகவே பழகலாம் என்று கூறிவிட்டார்.

பின்னர் அவருக்கும் என்னை பிடித்து நாங்கள் இருவரும் காதலில் விழுந்தோம் . இந்நிலையில் எங்கள் காதல் விவகாரத்தை எங்கள் வீட்டில் தெரிவித்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே சமயம் அவரது வீட்டில் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடு நடந்ததால் இனியும் தாமதிக்கக்கூடாது என்பதால் கோபியில் சட்டப்படி சுயமரியாதை செய்து கொண்டோம் என்றார் .

இதுகுறித்து திருநங்கை கயல்விழி கூறும்போது,

நான் சினிமாவில் தோற்றம், கந்தமலை, ராவண ராமணன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் தோற்றம், கந்தமலை படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெப் சீரியலான டாசிக் பார்ட்டியில் நடித்து வருகிறேன்.

முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம். அவர்தான் முதன்முதலில் காதலை என்னிடம் சொன்னார். நான் அப்போது சூழ்நிலை காரணமாக காதலை ஏற்கவில்லை. அதன்பிறகு நானும் காதலை ஏற்றுக்கொண்டேன் .

எங்கள் காதல் விவகாரம் பிரவீன் ராஜ் வீட்டிற்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் கோவிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்டபோது திருநங்கைக்கு திருமணம் செய்து வைத்ததில்லை என்று கூறி சான்றிதழ் தரவில்லை.

இதனை அவர்கள் வீட்டில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களை பிரிப்பதற்காக பிரவீன் ராஜை கட்டாயப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கே அவர் 3 வருடமாக தங்கியிருந்தார். எனினும் நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம் . இந்நிலையில் பிரவீன் ராஜிக்கு அவசரமாக வேறொரு பெண்ணை திருமணத்துக்காக நிச்சயம் செய்தனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செங்கோடு வந்தார். அதனை அடுத்து நாங்கள் சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கோபியில் மனித சட்ட உதவி மையத்தை நாடினோம். எனது பெற்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டோம் . தற்போது நாங்கள் திருச்செங்கோட்டில் இருக்கிறோம். கண்டிப்பாக எனது மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரவீன் ராஜிக்கு நல்ல மனைவியாகவும், அவரது குடும்பத்தினருக்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன், என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com