தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து ஹர்ஷ்வர்தன் சிங் என்ற மாணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஹர்ஷ்வர்தன் சிங்கிற்கு கலந்தாய்வு மூலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பொதுப்பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டது.
அவரிடம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர் என்ற சான்றிதழ் இருந்தபோதிலும் பொதுப்பிரிவில் இடம் ஒதுக்கி ஆண்டுக்கு ரூ.18.9 லட்சம் கல்விக் கட்டணம் கேட்டுள்ளனர்.
இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் ஹர்ஷ்வர்தன், உச்சநீதிமன்றத்தை அணுகிறார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஜாய்மாலா பாக்சி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பாதி இடங்களுக்கான கட்டணத்தை அரசு கல்லூரிகளில் உள்ள கட்டணத்திற்கு சமமாக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகவும், இது மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
பின்னர் பேசிய நீதிபதிகள்,
"அரசு கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரை ஒரு வெறும் ஆலோசனை மட்டுமே.
அரசு நிறுவனங்கள் அரசின் நிதி உதவியுடன் செயல்படுகின்றன, அதேசமயம் தனியார் கல்லூரிகள் சுயநிதியில் இயங்குகின்றன. கல்வி நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான கட்டணத்தை வசூலிக்க அவற்றுக்கு முழு உரிமை உண்டு.
ராஜஸ்தான் கட்டண ஒழுங்குமுறைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தையே மனுதாரரின் கல்லூரியும் வசூலித்து வருகிறது.
நாட்டிற்கு மருத்துவர்கள் தேவை என்பது உண்மைதான், ஆனால் பணம் இல்லாதவர்கள் அதற்காக கல்வி உதவித்தொகையை வேண்டுமானால் பெறலாம். அதற்காக கட்டணத்தை குறைக்க உத்தரவிட முடியாது" என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.