இந்தியா

‘கோயிலை நடத்துவது எங்கள் வேலையல்ல’: ராமர் கோயில் வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் விளக்கம்

ராமர் கோயிலின் அறக்கட்டளைத் தலைவராக இருந்த சம்பத் ராய், முன்னர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்தநிலையில், விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்குத் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், கோயில்களை கட்டுவதோ, அவற்றை நடத்துவதோ எங்களுடைய வேலை அல்ல என ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சர்வதேசத் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் அறக்கட்டளை சமீபத்தில் எடுத்த எந்த முடிவுகளுக்கும் தங்கள் அமைப்பு பொறுப்பேற்காது என்றும் விளக்கமளித்துள்ளார்.

அந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியதுடன் எங்கள் பங்கு முடிந்துவிட்டது. கோயில் கட்டப்பட்டது என்றால் அவற்றை நடத்தும் பொறுப்பு அறக்கட்டளையுடையது. அதன்பின் கோயிலில் நடக்கும் அனைத்திற்கும் அறக்கட்டளைதான் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக பதவி வகிப்பதற்கு முன்பு, சம்பத் ராய் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார். இதனையொட்டி இந்த விளக்கத்தை அலோக் குமார் அளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் சுமார் ரூ.7.5 கோடி வரை கையாடல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், கோயில் ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று கோயிலின் அறக்கட்டளைத் தலைவராக இருந்த சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது.