ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே
இந்தியா

ராமர் கோவில் நன்கொடை திருட்டு ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளது- ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர்

விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம் என ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் மிகவும் புண்படுத்தியுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறுகையில் "விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம். ராமர் கோயிலில் நன்கொடை திருட்டு என்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம். இந்த சம்பவத்தை பயன்படுத்தி இந்து விரோத, தேச விரோத சக்திகள் இந்து தர்மத்தை களங்கப்படுத்த முயல்கின்றன. அயோத்தியில் நடந்த ராமர் கோவில் நன்கொடைத் திருட்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் மிகவும் புண்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.

ரூ. 77.85 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ரா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். முடிவில், அவரது தந்தை பச்சுலாலை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கைதான எட்டு பேரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 77.85 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி, இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான அமெரிக்க டாலர்களும் சோதனையில் சிக்கியுள்ளன.

கழிப்பறையில் பணம் பதுக்கி வைப்பு

கைதான அவினாஷ் சுக்லா, கடந்த 10 ஆண்டுகளாக தங்கி இருந்த யோகா மையத்தில் இருந்து, ராமராஜ்யா கோஷ் என்ற பெயரில், க்யூ.ஆர்., குறியீட்டுடன் வைக்கப்பட்டிருந்த நன்கொடை பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கோவில் வளாகத்தில் பணியாற்றும் 400 தனியார் செக்யூரிட்டிகளின் பங்களிப்பு குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, கைதான அவினாஷ் சுக்லா, கண்காணிப்பு கேமராக்கள் குறைபாடுகளை பயன்படுத்தி, காணிக்கை எண்ணும் அறையில் இருந்து பணத்தை கட்டுக்கட்டாக திருடி, கோவிலுக்குள் இருக்கும் கழிப்பறையில் வைத்துவிட்டு, பின்னர் சிறிது, சிறிதாக அதை வெளியே எடுத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.

இதில், பலருக்கும் பங்கு இருப்பதாக அவர் கூறியதால், விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது முக்கிய குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றாம்சாட்டியுள்ளன.