பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்கும் திட்டம் இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதாகவும், இச்சோதனையின் முடிவுகள் மற்றும் தாக்கம் அடுத்தாண்டே தெரியவரும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எத்தனால் விவகாரம் பெரும் விவாதங்களை தூண்டியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த கருத்துகள் வந்துள்ளன.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையின் போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும், கரும்பு விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும் இந்த எத்தனால் கலப்புத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எத்தனால் கலப்புத் திட்டம், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் இந்தியா ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் எனவும் மத்திய அரசு கூறுகிறது.
உலகளவில் நடைமுறையில் உள்ள இத்திட்டம், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
சில எண்ணெய் நிறுவனங்கள் ஏப்.1 முதலே எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகித்து வருகின்றன. 2030க்குள் இதனை 30%-மாக உயர்த்தவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
என் எத்தனால் விவாதம்?
அதிக அளவில் எத்தனால் கலப்பது பழைய வாகனங்களைச் சேதப்படுத்துவதோடு, எரிபொருள் செயல்திறனையும் குறைக்கும் என்று பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். எத்தனால், தூய பெட்ரோலை விடக் குறைந்த ஆற்றலையே கொண்டுள்ளது. இதனால் வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 5% வரை குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் இது வேறுவிதமான இயற்கை மாசுபாட்டையும் உருவாக்கும் என கூறப்படுகிறது.