வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது.
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அரசு எடுக்கக்கூடிய "மிகக் கடுமையான நடவடிக்கை" என்பது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவதுதான் என்று அக்கட்சி கூறியுள்ளது.
பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளித்த சி.ஜே.பி.-யின் தேசிய செய்தி தொடர்பாளர் அஷூதோஷ் ரன்கா, "மோடி ஜி, நாளைக்கே தர்மேந்திர பிரதானை நீக்குங்கள். அதுதான் நீங்கள் எடுக்கக்கூடிய மிக கடுமையான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.
பிரதமரின் அறிவிப்பு குறித்து CJP-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கேவும் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சட்டத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், சுற்றுச்சுவர்கள் இல்லாத ஒரு வளாகத்தின் நுழைவாயிலை ஒருவர் பூட்டுவது போன்ற படத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விரைவு நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக கூறிய அவர், இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் உறுதியாக தெரிவித்தார்.