இந்தியா

ரெயில் உணவில் இப்படியொரு அலட்சியமா? உணவில் கிடந்த இரும்புத் துண்டு- ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!

கவுகாத்தியில் இருந்து ஓகா நோக்கிச் சென்று கொண்டிருந்த துவாரகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமித் அவஸ்தி என்ற பயணி பயணம் செய்துள்ளார்.

பயணியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக விழிப்படைந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. ரெயிலில் உணவு மற்றும் கேடரிங் சேவைகளை வழங்கி வரும் தொடர்புடைய நிறுவனத்திற்குப் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய ரெயில்வேயில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாகியுள்ளது. ரெயில் பயணத்தின் போது ஐ.ஆர்.சி.டி.சி வழங்கிய உணவில் இரும்புத் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் துரிதமாகச் செயல்பட்ட ரெயில்வே துறை, சம்மந்தப்பட்ட உணவு வழங்குநருக்குக் கடுமையான அபராதம் விதித்துள்ளதுடன், பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

கவுகாத்தியில் இருந்து ஓகா நோக்கிச் சென்று கொண்டிருந்த துவாரகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமித் அவஸ்தி என்ற பயணி பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பருப்பு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அதில் சிறிய வெள்ளி நிற இரும்புத் துண்டு ஒன்று இருப்பதை அவர் கண்டுள்ளார். பாதியைச் சாப்பிட்டு முடித்த பின்னரே இந்த விஷயம் தெரியவந்துள்ளதுடன், தான் அறியாமல் அந்த இரும்புத் துகள்களை விழுங்கியிருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பணியாளரின் விளக்கம்

இந்தச் சம்பவத்தை உடனடியாகப் பதிவு செய்த பயணி அமித் அவஸ்தி, சமூக வலைதளப் பக்கத்தில் உணவில் இரும்புத் துண்டு இருக்கும் காட்சிகளுடன் கூடிய காணொளியைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ரெயில்களில் விற்கப்படும் உணவுகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், உணவோடு சேர்த்து ஸ்டீலையும் சேர்த்துத் தருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இதுகுறித்து உணவு பரிமாறும் ஊழியரிடம் கேட்டபோது, பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் ஸ்கிரப்பரின் துண்டு தவறுதலாக உணவில் கலந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். பயணிக்கு மாற்று உணவு வழங்குவதாகவோ அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படுவதாகவோ ஊழியர்கள் கூறிய பதிலை, ஏற்க மறுத்த அவர், இந்த விவகாரத்தை ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

ஐ.ஆர்.சி.டி.சி நடவடிக்கை

பயணியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக விழிப்படைந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. ரெயிலில் உணவு மற்றும் கேடரிங் சேவைகளை வழங்கி வரும் தொடர்புடைய நிறுவனத்திற்குப் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட சம்மந்தப்பட்ட உணவு பரிமாறும் பணியாளர்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் எக்காரணம் கொண்டும் மீண்டும் நடைபெறக்கூடாது என்று சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்திற்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர ரெயில் பயணங்களின் போது பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் அந்நியப் பொருட்கள் மற்றும் உலோகத் துகள்கள் கண்டறியப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை முக்கிய ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்துப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் ரெயில்வே பயணிகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார முறைகள் குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT