Video: ரெயில் பெட்டியை சமையலறையாக மாற்றிய குஜராத் குடும்பம்!

ரெயில்வே சட்டம் 1989 மற்றும் பாதுகாப்பு விதிகளின்படி ரெயில் பெட்டிகளுக்குள் சமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
Passenger Safety
Published on: 
Summary

PassengerSafetyரெயிலின் 3AC பெட்டியில் உள்ள இருக்கைகளைத் தற்காலிக சமையலறை மேடையாக மாற்றி, குஜராத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சாண்ட்விச் தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரம், சக பயணிகளுக்கான மரியாதை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு விதிகள் குறித்து இந்தச் சம்பவம் இணையத்தில் தீவிர விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ரெயில் பெட்டியில் நடந்த 'சாண்ட்விச்' தயாரிப்பு

இணையத்தில் பரவி வரும் வீடியோவில், ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்யும் குடும்பத்தினர், நடு இருக்கை மற்றும் அருகிலுள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து உணவுகளை தயாரிக்கின்றனர்.

இருக்கைகளில் அழுக்குப் படாமல் இருப்பதற்காகச் செய்தித்தாள்களை விரித்து, அதன் மீது பிரெட் துண்டுகளை அடுக்கி, காய்கறிகள் மற்றும் சட்னி தடவி அப்பெண்கள் சாண்ட்விச் தயாரித்துள்ளனர்.

இதற்கிடையில், அங்கிருந்த பெண் ஒருவர், "நாம் எலெக்ட்ரிக் டோஸ்டரை கொண்டு வந்திருக்கலாம்; அப்படிச் செய்திருந்தால் சாண்ட்விச்சை கிரில் செய்தும் சாப்பிட்டிருக்கலாம்" எனக் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே ரெயில் பெட்டியைச் சமையலறையாக மாற்றிய நிலையில், அவரது இந்தப் பேச்சு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இணையத்தில் கலவையான விமர்சனங்கள்

இந்த வீடியோவுக்குச் சமூக வலைதளங்களில் இருவேறு விதமான கருத்துகள் பதிவாகி வருகின்றன.

ஒரு சிலர் இதனை வேடிக்கையாகப் பார்த்தாலும், பெரும்பாலானோர் சக பயணிகளின் அசௌகரியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்து கொண்டதாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "ரெயில் இருக்கைகள் பயணம் செய்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் தானே தவிர, சமையல் கூடம் அமைப்பதற்கு அல்ல" எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் தனிப்பட்ட வசதியை விட, பொதுப் பொறுப்புணர்வுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

ரெயில்வே சட்டமும் பாதுகாப்பு அபாயங்களும்

பயணத்தின்போது வீட்டிலிருந்து சமைத்த உணவுகளை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், ரெயில் பெட்டிக்குள் வைத்து உணவு தயாரிப்பதும் சமைப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

ரெயில்வே சட்டம், 1989 மற்றும் ரெயில்வே பாதுகாப்பு விதிகளின் கீழ், ரெயில் பெட்டிகளுக்குள் சமைப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பயணிகள், உடமைகள் மற்றும் மின்சாதனங்கள் நெருக்கமாக இருக்கும் குறுகிய இடத்தில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எலெக்ட்ரிக் டோஸ்டர் போன்ற அங்கீகரிக்கப்படாத வெப்பமூட்டும் மின்சாதனங்களை ரெயிலின் சார்ஜிங் பாயிண்ட்களில் பயன்படுத்துவது, மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற பெரும் ஆபத்துகளை சக பயணிகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

X