நீட் உள்ளிட்ட வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களின்போது பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக சில இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று இன்டாவில் செல்பி வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, "தன்னைப் பற்றியும் தனது தாயை பற்றியும் தவறாக பேசியவர்களை நான் மன்னிக்கிறேன். அவர்கள் நமது நாட்டின் இளம் தலைமுறையினர். அவர்களின் தவறை திருத்தி நல்வழிப்படுத்துவது நம் கடமை" என பேசியிருந்தார்.
இந்நிலையில் மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.
வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.
இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்
மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.