'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!

"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன்"
PM MODI
Published on

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கோஷங்களை எழுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது சிறுமி, சமூக வலைதளங்களில் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

சம்பவம் பின்னணி:

கடந்த ஜூலை 23 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டை 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட நோய்டாவைச் சேர்ந்த ஒரு சிறுமி, பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரைப் பற்றி மிகவும் அவதூறான முறையில் முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நோய்டாவின் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 29 அன்று அந்த சிறுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறுமிக்கு எதிரான சட்டப் பிரிவுகள்:

இந்திய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் வதந்தி அல்லது தகவல்களைப் பரப்புதல், அவதூறு வழக்கு போன்ற பிரிவுகளின் கீழ் சிறுமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

சம்பவம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்ததால், இந்த Zero FIR தற்போது மேலதிக விசாரணைக்காக டெல்லியில் உள்ள பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வழக்கு வேண்டாம்-வழிகாட்டுங்கள்:

இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

"எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்,"* எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்ட சிறுமி:

பிரதமரின் இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, அச்சிறுமியின் மன்னிப்பு வீடியோ இணையத்தில் வைரலானது. கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்றுவிட்டுத் தனது நண்பர்களுடன் ஜந்தர் மந்தர் போராட்டத்தைப் பார்க்கச் சென்றதாகவும், அங்கு இருந்த சிலரின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டுத் தானும் அவ்வாறு முழக்கமிட்டதாகவும் சிறுமி கூறினார்.

மனவருத்தம்:

"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.

காவல்துறை விசாரணை:

சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. காவல்துறை அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. போராட்டத்தை நடத்திய CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவிக்கையில், "தவறான அல்லது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், இதுபோன்ற கருத்துக்களுக்காகக் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது பேச்சு சுதந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்படைந்தவர்கள் சிவில் அவதூறு வழக்கைச் சந்திக்கலாமே தவிர, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது சரியல்ல, எனக் கூறியுள்ளார். இவ்விகாரத்தில் காவல்துறை தனது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com