இழிவுபடுத்தியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்: இழிவான காணொளிகள் குறித்து பிரதமர் மோடி கருத்து

அவர்கள் என்னையும், என் மறைந்த தாயாரையும் கூட அவதூறாக பேசினர்.
PM Modi
Published on

டெல்லியின் ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது தன்னை அவதூறாக பேசியதாக கூறப்படும் மாணவர்களை மன்னித்துவிட்டதாகவும், அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக சமூகம் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தனக்கும் தனது மறைந்த தாயாருக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட அவதூறான முழக்கங்கள் மிகுந்த மனவேதனையை அளித்ததாக குறிப்பிட்ட மோடி, இளைஞர்களுக்கு தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் வீடியோ:

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "ஜந்தர் மந்தரில் நடந்தது... நாடு முழுவதிலும் இருந்து வந்த குழந்தைகள் மிகவும் மோசமான, அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினர். அவர்கள் என்னையும், என் மறைந்த தாயாரையும் கூட அவதூறாக பேசினர். அது மிகுந்த மனவேதனையை அளித்தது.

குழந்தைகள் தவறு செய்வது இயல்பு; அந்த தவறுகளை திருத்திக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய பருவமும் அதுவே. என்னை அவதூறாக பேசியவர்களை நான் மன்னிக்க விரும்புகிறேன். எனது இந்த முடிவை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கனவுகளை நனவாக்குவோம்:

சில நேரங்களில் நம்முடைய பற்களே தவறுதலாக நம் நாக்கை கடித்துவிடுகின்றன, அதனால் ரத்தமும் கசிகிறது. ஆனால் அதற்காக நாம் பற்களை உடைத்துவிடுவதில்லை; ஏனெனில் பற்களும் நாக்கும் நம்முடையவைதானே.

அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்களை நல்வழிப்படுத்துவது நமது பொறுப்பு. அவர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுப்பதோ அல்லது சமூக ரீதியாக துன்புறுத்துவதோ எதையும் மாற்றிவிடாது.

வாருங்கள், நாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம். நம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நமது கனவுகளை நனவாக்குவோம். இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; நீங்களும் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com