நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அந்தமான் கடலில் 'ஸ்கூபா டைவிங்' செய்ததற்கு அரசுப் பணத்தில் 26 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை "அவதூறு பரப்புவதற்கான அமைச்சர்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
"மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பாசிச அரசியல்"
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில், "மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் இந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது மற்றும் உள்நோக்கம் கொண்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள 'மகா நிக்கோபார் மேம்பாட்டுத் திட்டம்' தொடர்பாக எழுந்துள்ள மக்கள் சார்ந்த சுற்றுச்சூழல் கவலைகளையும், கேள்விகளையும் திசைதிருப்பவே பாஜக இந்த அவதூறைப் பரப்புகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுற்றுலாத்துறையை முடக்கும் அல்லது அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ன இந்த மகா நிக்கோபார் சர்ச்சை?
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மற்றும் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தால் அங்குள்ள காடுகள், கடல்சார் சூழல் மற்றும் பூர்வகுடி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த ஆளும் தரப்பு - ஏதிர்காட்சி மோதலுக்கு மத்தியில்தான், ராகுல் காந்தியின் ஸ்கூபா டைவிங் செலவு குறித்த இந்த புதிய சர்ச்சை வெடித்துள்ளது.