பிரதமர் மோடி தனது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குளறுபடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதையடுத்து கடந்த 12 நாட்களில் தொடர்ந்து ஏழாவது முறையாக பிரதமர் மோடிக்கு சவால் விடும்படி சில கருத்துகளை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில், ‘என்னிடம் கேளுங்கள்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணையதள பயனர்களுடன் ஆன்லைனில் ராகுல் காந்தி உரையாடினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியுடன் நேரடியாக பொது விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் தான் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தன்னுடையை தொலைபேசியையும், பல அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசியையும் பெகாசஸ் கருவி மூலம் மத்திய அமைப்புகள் ஒட்டுக்கேட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பிரதமருக்கு எதிராக தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, யார் வெளிநாட்டு கட்டுப்பாட்டில் இருக்கிறார்? யார் தேசவிரோதி? என்ற கேள்விக்கு நேருக்கு நேர் விவாதம் நடத்த வரும்படி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டும், இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை ராகுல் காந்தி வைத்திருந்தார்.
மேலும், தனது தொலைபேசியின் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டு வருவதால் கவனமாக இருக்கும்படி உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஏற்கனவே தயாராக இருக்கும்போது, ஒரு இடத்தை தேர்ந்தெடுக்குமாறு ராகுல் காந்தி ஏன் பிரதமரிடம் கேட்கிறார்’ என கூறினார்.