இந்தியா

பஞ்சாப் ரெயில்வே பாதை குண்டுவெடிப்பு வழக்கு: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கியக் குற்றவாளி கைது

குண்டுவெடிப்பை நிகழ்த்தும்போது உயிரிழந்த ஜக்ரூப் சிங் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள ஷம்பு மற்றும் ராஜ்புரா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள பிரத்யேக சரக்குத் தட கார்ப்பரேஷன் ரெயில்வே பாதையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் போர்ஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பஞ்சாப் ரெயில்வே பாதை குண்டுவெடிப்பு வழக்கில், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கியக் குற்றவாளியை தேசியப் புலனாய்வு முகமை இன்று கைது செய்துள்ளது. இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடைய முக்கிய நபரான சுரிந்தர் சிங் என்ற திகிர்வால் என்பவரைக் கைது செய்துள்ளதாகத் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டுவெடிப்பு சம்பவம்

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள ஷம்பு மற்றும் ராஜ்புரா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள பிரத்யேக சரக்குத் தட கார்ப்பரேஷன் ரெயில்வே பாதையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கைக் குலைப்பதற்கும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சிதைப்பதற்கும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாகி வெளிநாடுகளில் வசித்து வந்த சுரிந்தர் சிங், அமெரிக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ராஜ்புரா-ஷம்பு ரெயில் பாதைக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, சுரிந்தர் சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் இந்தச் செயலை நியாயப்படுத்தும் வகையிலும், ஆதரிக்கும் வகையிலும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், குண்டுவெடிப்பை நிகழ்த்தும்போது உயிரிழந்த ஜக்ரூப் சிங் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பைக் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்த அவர், பயங்கரவாதியான ரஞ்சித் சிங் என்பவரைப் பாராட்டியும் பேசியுள்ளார். இந்தத் தீவிரவாதச் செயலில் தொடர்புடைய எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளின் வலைப்பின்னலை அழிக்க NIA தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT