மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், புகைப்படம் எடுத்தபோது நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 26 வயது இளைஞரின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் அந்த இளைஞரின் வருங்கால மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
புனே அருகே உள்ள கஹுஞ்சே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர் கேதன் விஷால் அகர்வால். இவருக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த ஜூன் 19-ம் தேதி சோகமான சம்பவம் நிகழ்ந்தது.
தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அவரும் அவரது இரு நெருங்கிய நண்பர்களும் லோஹாகர் கோட்டைக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளனர்.
அன்று காலை 10:30 மணியளவில், பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தபோது கோட்டையின் விளிம்பில் நின்று கேதன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, சுமார் 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் அவர் விழுந்துவிட்டதாக லோனாவாலா ஊரக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அவசர மீட்புக்குழுவினர் சுமார் 3 மணி நேரம் தீவிரமாகப் போராடி, அடர்ந்த பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து கேதனின் உடலை மீட்டனர்.
ஆரம்பக்கட்டமாக, இந்தச் சம்பவத்தை ஒரு விபத்து மரணமாகப் பதிவு செய்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்..
இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு இன்று ஒரு பெரும் உண்மை தெரியவந்துள்ளது.
கேதன் தற்செயலாகக் கீழே விழுந்து இறக்கவில்லை; அவரது வருங்கால மனைவியும், அவருடன் வந்த ஆண் நண்பரும் சேர்ந்து திட்டமிட்டே கேதனை 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்துள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொலையை மறைப்பதற்காகவே, பலத்த காற்றினால் கேதன் நிலைதடுமாறி விழுந்துவிட்டதாக இருவரும் சேர்ந்து போலீசாரிடம் நாடகமாடியுள்ளனர்.
தற்போது இந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லியில் மனைவியைக் கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவன்!
இதே போன்றதொரு கொடூரமான சம்பவம் டெல்லியின் காலிந்தி குஞ்ச் பகுதியிலும் நடந்துள்ளது.
கள்ளத்தொடர்பு இருப்பதாகத் தனது 18 வயது மனைவியின் மீது சந்தேகம் கொண்ட 21 வயது இளைஞன் ஒருவன், மனைவியின் கழுத்தை நெரித்து தலையணையால் முகத்தை அமுக்கியும் படுகொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு கிட்டத்தட்ட 12 மணி நேரம் மனைவியின் சடலத்தின் அருகிலேயே தூங்கியுள்ளார் கணவன். பிறகு இந்த கொலையைத் தற்கொலையாக மாற்ற நாடகமாடியுள்ளார்.
சடலத்தைக் கீழே இறக்கிவிட்டு, தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகக் கத்தி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
ஆனால், பெண்ணின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அந்த பெண் மூச்சுத்திணறிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.