இந்தியா

தொழிலதிபர் கேதன் கொலை வழக்கு: சியா கோயல் தரப்பு வழக்கறிஞர்கள் மோதல்: ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகியோரின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள லோஹாகாட் கோட்டையில் நடந்த கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் தரப்பில் யார் வாதாடுவது என்பது குறித்து இரண்டு வழக்கறிஞர்களிடையே புதிய சட்டப் போராட்டம் வெடித்துள்ளது.

சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சவுத்ரி ஆகியோர் இணைந்து, சியாவின் வருங்கால கணவரான கேதன் அகர்வாலை கடந்த ஜூன் 18 அன்று லோஹாகாட் கோட்டை உச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாகக் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் புனேயைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் "அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா" மற்றும் "விபுல் துஷிங்" ஆகிய இருவருமே தாங்கள்தான் சியாவின் அதிகாரப்பூர்வ வழக்கறிஞர் என்று உரிமை கொண்டாடுகின்றனர்.

வழக்கறிஞர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா, சியா கோயல் தனக்கு ஆதரவாக வாதாட 'வக்காலத்து நாமா' எனப்படும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால், சியாவின் குடும்பத்தினர் விபுல் துஷிங் என்பவரையே தங்கள் வழக்கறிஞராக அணுகியதாக சியாவின் சகோதரர் சாஹில் கோயல் தெரிவித்தார்.

இந்த சர்ச்சை நீதிமன்ற விசாரணையின் போது உச்சக்கட்டத்தை எட்டியது. வட்கான் மாவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சியா கோயல், "அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா எனது வழக்கறிஞர் அல்ல, விபுல் துஷிங் தான் என்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்" என்று வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சாஹில் கோயல் ஊடகங்களில் தனக்கு எதிராக தவறான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி, அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா 10 பக்க சட்ட நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், சியா ஒரு மேஜர் என்பதால் அவராகவே முன்வந்து இந்த வக்காலத்து ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

சாஹிலின் பொது அறிக்கை தனது தொழில்முறை நற்பெயரைக் கெடுத்துள்ளதாகவும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூபில் இருந்து அந்த வீடியோக்களை உடனே நீக்க வேண்டும் என்றும், 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்டு, 7 நாட்களுக்குள் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகியோரின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து வட்கான் மாவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமணப் பொருட்கள் வாங்குவதற்காக சியா தனது வருங்கால கணவர் கேதனிடமிருந்து ரூ.1 கோடி பெற்று, அதைத் தனது காதலனுக்குக் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT