பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோஹகாட் கோட்டையின் பள்ளத்தாக்கில் தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது வருங்கால மனைவி சியா கோயல் (20), சியாவின் காதலர் சேத்தன் சௌத்ரி (22) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட ஆடம்பரத் திருமணம்..
கேதனுக்கும் சியாவிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் இவர்களது திருமணம் நடக்கவிருந்தது.
இதற்காக உறவினர்களை அழைத்துச் செல்ல இரண்டு சிறப்பு விமானங்கள் கூட முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..
சியாவும் அவரது காதலர் சேத்தனும் கடந்த 6 மாதங்களில் மட்டும் 4,400 முறை போனில் பேசி இந்த கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
ஜூன் 18 அன்று சியாவின் பிறந்தநாள். அன்றைய தினம் கேதன் சியாவிற்குப் பல சர்ப்ரைஸ் பரிசுகளை வழங்கியுள்ளார்.
ஆனால், அதே நாளில் சியா தனது காதலனை ஒரு கஃபேயில் ரகசியமாகச் சந்தித்து, கோட்டையில் எந்த இடத்திலிருந்து கேதனைத் தள்ளிவிடலாம் என்று வரைபடம் போட்டு விவாதித்துள்ளார்.
சியா தொடர்ந்து கேதனை லோஹகாட் கோட்டைக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்கள் சென்ற இடங்களுக்குப் பின்னாலேயே காதலன் சேத்தனும் பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். காதலன் சேத்தன் ஓகே சொன்ன இடத்தில் கேதனை தள்ளிவிட்டுள்ளார் சியா.
இதனிடையே திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் பாலியில் நடக்கவிருந்த தகவல் வெளியாகிவுள்ளது.
ஆனால், மும்பை விமான நிலையம் செல்லும் வழியில், ஒரு உணவகத்தின் குப்பைத் தொட்டியில் கேதனின் பாஸ்போர்ட்டை சியா ரகசியமாக வீசியுள்ளார்.
இதனால் பாலி பயணம் ரத்தானது. ஜூன் 18 அன்று கோட்டையிலிருந்து கேதன் விழுந்ததும், முதலில் போட்டோ எடுக்கும்போது தவறி விழுந்தார் என்று சியா கூறினார்.
பின்னர், தண்ணீர் பாட்டில் தரும்போது நழுவி விழுந்தார் என மாற்றிப் பேசினார். அந்த இடம் எளிதில் யாரும் பார்க்க முடியாத பகுதி என்பதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
கொலை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கேதனும் சியாவும் மகிழ்ச்சியாக நடனமாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.